திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.32 திருஏடகம்
பண் - கொல்லி
வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்
பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட அடியவர்
இன்னிசை பாடலர் ஏடகத் தொருவனே.
1
கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி
வடிவுற அமைதர மருவிய ஏடகத்
தடிகளை அடிபணிந் தரற்றுமின் அன்பினால்
இடிபடும் வினைகள்போய் இல்லைய தாகுமே.
2
குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை
வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி
செண்டலம் பும்விடைச் சேடனூர் ஏடகங்
கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே.
3
ஏலமார் தருகுழல் ஏழையோ டெழல்பெறுங்
கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடஞ்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகஞ்
சீலமார் ஏடகஞ் சேர்தலாஞ் செல்வமே.
4
வரியணி நயனிநன் மலைமகள் மறுகிடக்
கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே.
5
பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்
கையனை அடிபணிந் தரற்றுமின் அடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
தடவரை யெடுத்தவன் தருக்கிறத் தோளடர்
படவிரல் ஊன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
இடமுடைச் சடையினை ஏடகத் திறைவனே.
8
பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற
அன்னமாம் அளனுமா லடிமுடி தேடியும்
இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே.
9
குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க் குஞ்சடை ஏடகத் தெந்தையே.
10
கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்
ஏடுசென் றணைதரும் ஏடகத் தொருவனை
நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன
பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com